களக்காட்டில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய 107 பேர் மீது வழக்கு

களக்காட்டில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 107 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2020-12-10 21:30 GMT
களக்காடு,

மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும் களக்காட்டில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராஜன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் பிரமுகர் ரூபி மனோகரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

இதில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ரூபி மனோகரன் உள்பட 94 பேர் மீது களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

களக்காட்டில் இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆங்கில மருத்துவர்கள் மேற்கொள்ளும் அறுவை சிகிச்சைகளை ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா மருத்துவர்கள் மேற்கொள்ள அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்திய மருத்துவர்கள் சங்க வள்ளியூர் கிளை செயலாளர் டாக்டர் ஜேக்கப் சுவரூப் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் சொக்கலிங்கம், ஆதம் ஷேக் அலி, மதிவாணன், ராணி சந்திரசேகரன், தஸ்லிமா, பாஸ்கர், நிர்மலா பாஸ்கர் கலந்து கொண்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக ஜேக்கப் சுவரூப் ஆனந்த் உள்ளிட்ட 13 பேர் மீது களக்காடு இன்ஸ்பெக்டர் காளியப்பன் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்