கல்லூரி மாணவர்கள் இம்மாத இறுதிக்குள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்; விருதுநகர் கலெக்டர் கண்ணன் தகவல்

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இம்மாத இறுதிக்குள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-10 22:29 GMT
விருதுநகர் கலெக்டர் கண்ணன்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

உதவித்தொகை
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் மாணவர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை
முதுகலை பாலிடெக்னிக் தொழில் படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோர்களது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களிலேயே சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் புதுப்பித்தல் உதவித் தொகை இனங்களுக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும், கேட்புகளை சமர்ப்பிப்பதற்கும் இம்மாத இறுதி வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேற்காணும் கால நிர்ணயத்திற்குள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் எவ்வித விடுதலுமின்றி புதுப்பித்தல் இனங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்