கண்மாய்க்கு தண்ணீர் திறக்கக்கோரி மானாமதுரையில், விவசாயிகள் சாலை மறியல்
கண்மாய்க்கு தண்ணீர் திறக்கக்கோரி மானாமதுரையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை-ராமேசுவரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு
வைகை அணையில் இருந்து கடந்த 30-ந்தேதி மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்த வைகை ஆற்று தண்ணீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
வைகை ஆற்றில் இருந்து பல்வேறு கண்மாய்களின் வழியாக விவசாய பாசனத்துக்கும், குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீருக்கும் தண்ணீர் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் மானாமதுரை பகுதியை சேர்ந்த கீழபசலை, மேலபசலை, சங்கமங்களம், ஆதனூர் பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த 7-ந்தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் அந்த தண்ணீர் கால்வாய்களில் போதுமானதாக செல்லவில்லை.
சாலை மறியல்
இதனால் அப்பகுதி விவசாயிகள் கூடுதல் தண்ணீர் திறக்கக்கோரி பொதுப்பணித்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் மானாமதுரை அருகே கீழபசலைவிளக்கு பகுதியில் திரண்டனர். அங்கு மதுரை-ராமேசுவரம் சாலையில் உட்கார்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது:-
கீழபசலை, மேலபசலை, சங்கமங்களம், ஆதனூர் ஆகிய பகுதியை சேர்ந்த விவசாயிகளாகிய நாங்கள் சிவகங்கை மாவட்டத்தின் கடைக்கோடியில் இருக்கின்றோம். எங்களுக்கு முன்பு உள்ள பாசன
விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு தேவையான தண்ணீரை எடுத்து கொள்கிறார்கள். எங்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்காததால் 5 ஆயிரம் ஏக்கர் பாசனம் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தண்ணீருக்காக போராட வேண்டிய நிலை தான் உள்ளது. அதனால் தான் நாங்கள் மறியலில் ஈடுபட்டு உள்ளோம். பொதுப்பணித்துறை அதிகாரி வந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுத்து உறுதி அளித்தால் தான் மறியலை கைவிடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.