ஆற்றுக்கு சென்ற முதியவர் மாயம்; தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 80). செல்போன் கடை நடத்தி வருகிறார்.

Update: 2020-12-10 20:15 GMT
இவர் நேற்று காலை இயற்கை உபாதை கழிக்க அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரை தேடி ஆற்று பகுதிக்கு சென்று பார்த்தபோது, அவருடைய கைத்தடி மட்டும் கிடந்தது. இதையடுத்து அவர் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என்று எண்ணிய குடும்பத்தினர், இது பற்றி திருமானூர் போலீசாருக்கும், அரியலூர் தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி, கோவிந்தராஜை தேடினர். மாலை வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தேடுதல் பணி நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆற்றில் தேடியும் கோவிந்தராஜ் கிடைக்காததால், அவர் ஆற்றில் மூழ்கினாரா? அல்லது வேறு எங்கும் சென்றாரா? என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்