திருகல் நோய் தாக்கி சின்ன வெங்காய பயிர் நாசம்; கட்டுப்படுத்த கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் திருகல் நோய் தாக்குதலினால் சின்ன வெங்காய பயிர் நாசமடைந்து வருகிறது. அந்த நோயினை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகல் நோய்
சின்ன வெங்காயம் சாகுபடியில் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இங்குள்ள பெரும்பாலான விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் சின்ன வெங்காய சாகுபடியில் ஈடுபடுகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், ஆலத்தூர் ஆகிய தாலுகாக்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 3 மாத கால பயிரான சின்ன வெங்காயம் பெரம்பலூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
விலை உயர்ந்து வந்ததால் இந்த ஆண்டு மாவட்டத்தில் இதுவரை சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ‘நிவர்’, ‘புரெவி’ ஆகிய புயல்களினால் பெய்த மழையினாலும், வடகிழக்கு பருவமழையினாலும், வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியால் வயல்களில் தேங்கி நிற்பதாலும், குளிர் மற்றும் மழைக்காலங்களில் நிலவும் தொடர் ஈரப்பத நிலையில் வெங்காய பயிர்களில் கோழிக்கால் எனப்படும் திருகல் நோய் தாக்கி வெங்காய பயிர்கள் முழுவதும் நாசமடைந்து வருகிறது.
நிவாரணம்
மருந்துகளை அடித்தால் சரியாகும் என்று பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து மருந்து தெளித்தும், எந்த பயனும் இன்றி சின்ன வெங்காயம் அழுகி வீணாகி வருவதால் பெரும் நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.
எனவே சின்ன வெங்காய பயிரை தாக்கியுள்ள திருகல் நோயை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை மூலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசின் நிவாரண தொகையை பெற்றுத்தர வேண்டும் என்று சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.