காட்டு யானை தாக்கி தொழிலாளி சாவு: உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டம் - வனத்துறையினர் பேச்சுவார்த்தை

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-10 15:59 GMT
கூடலூர்,

கூடலூர் தாலுகா ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட ஓடக்கொல்லி பகுதியில் காட்டு யானை ஒன்று முகாமிட்டு உள்ளது. நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த மணி (வயது 52) என்ற தொழிலாளியை காட்டு யானை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதையறிந்த கூடலூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அத்துடன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்ப முயன்றனர். ஆனால் அங்கு திரண்ட கிராம மக்கள், மணியின் உடலை எடுக்க விடாமல் தடுத்ததுடன், காட்டு யானைகளின் தொடர் தாக்குதலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், வனத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த முதுமலை வனத்துறையினர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கும்கி யானைகள் மூலம் கண்காணிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் போலீசார் மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது இறந்த மணியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், உடலை வாங்க மறுத்தனர். அத்துடன் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க அகழியை ஆழப்படுத்த வேண்டும், அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்குவதாக ஸ்ரீ மதுரை ஊராட்சி தலைவர் சுனில் தலைமையில் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர் சிவக்குமார், தயானந்தன் மற்றும் கூடலூர் கோட்ட உதவி வனபாதுகாவலர் விஜயன், வனச்சரகர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க 2 கும்கி யானைகள் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அந்த காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர்.

இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு மணியின் உடலை வாங்கிச்சென்றனர். தொடர்ந்து முதுமலையில் இருந்து சுஜய், விஜய் என்ற 2 கும்கி யானைகள் ஓடக்கொல்லி கிராமத்துக்கு வரவழைக்கப்பட்டு, வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்