முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: ஆ.ராசா எம்.பி. உருவபொம்மை எரிப்பு

முதல்-அமைச்சரை அவதூறாக பேசியதாக ஆ.ராசா எம்.பி. உருவபொம்மையை அ.தி.மு.க.வினர் எரித்தனர்.

Update: 2020-12-10 15:54 GMT
ஊட்டி,

முன்னாள் மத்திய மந்திரியும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை அவதூறாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நீலகிரி மாவட்ட அ.தி.மு.க.வினர் நேற்று திடீரென ஊட்டி காபிஹவுஸ் ரவுண்டானா பகுதியில் மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத், சாந்திராமு எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் ஆ.ராசாவின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் எரிக்கப்பட்ட உருவபொம்மையை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதற்கிடையே, ஆ.ராசா எம்.பி.யின் உருவபொம்மையை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க.வினர் ஊட்டி நகர மத்திய போலீசில் புகார் செய்தனர்.

கோத்தகிரி பஸ்நிலையம் பகுதியில் நேற்று மாலையில் சாந்திராமு எம்.எல்.ஏ. தலைமையில் நகர செயலாளர் நஞ்சு, கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் கே.கே.மாதன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வடிவேல், அம்மா பேரவை செயலாளர் சக்கத்தா சுரேஷ், கருவினை கிளைச்செயலாளர் சிவராஜ் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு ஆ.ராசா எம்.பி.யின் உருவபொம்மையை எரிக்க உள்ளதாக தகவல் பரவியது. இதனால் அங்கு கோத்தகிரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராம்குமார், கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், தேனாடு ஊராட்சி தலைவர் ஆல்வின் மற்றும் தி.மு.க.வினர் அந்தப்பகுதியில் திரண்டு அ.தி.மு.க.வினரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

அத்துடன் அ.தி.மு.க.-தி.மு.க.வினர் கண்டன கோஷம் எழுப்பியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதுடன் ஆ.ராசாவின் உருவபொம்மையையும் பறிமுதல் செய்தனர். மேலும் தி.மு.க.வினரை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாக சென்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினரும் ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தி.மு.க.வை சேர்ந்த 20 பேரை கைது செய்தனர்.

பந்தலூர் பஜாரில் அ.தி.மு.க. நெல்லியாளம் நகர செயலாளர் டி.எல்.எஸ்.ராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் ஆ.ராசா எம்.பி.யின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தலைமை பேச்சாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்