தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது டிரைவர்கள் 2 பேர் படுகாயம்

தொப்பூர் கணவாயில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2020-12-10 14:44 GMT
நல்லம்பள்ளி, 

டெல்லியில் இருந்து கார்கள் ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி கேரளாவுக்கு புறப்பட்டது. இந்த லாரியை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டிரைவர் லோட்டஸ் (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக சிங்கோ (24) உடன் வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று அந்த லாரி சென்று கொண்டிருந்தது.

தொப்பூர் இரட்டைப்பாலம் பகுதியில் சுங்கசாவடி நிர்வாகம் மூலம் ஆய்வு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் வெள்ளக்கல் கட்டமேட்டில் இருந்து தொப்பூர் போலீசார் குடியிருப்பு வரை ஒரு வழிப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. அப்போது தொப்பூர் ஆஞ்சநேயர் கோவிலை கடந்து கணவாய் பகுதியில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இதில் டிரைவர்கள் 2 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து படுகாயம் அடைந்த டிரைவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் கவிழ்ந்த கன்டெய்னர் லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் இருந்து ஒரு லாரி திருநெல்வேலிக்கு புறப்பட்டது. இந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ஜெயபிரகாஷ் (வயது 24) ஓட்டி வந்தார். தொப்பூர் கணவாயில் லாரி வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த தீனதயாளன் (37), சேலம் மாவட்டத்தை சேர்ந்த செல்வகுமார் (36) ஆகிய 2 பேரும் சிக்கி தவித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று காயம் அடைந்த 2 பேரையும் காரில் இருந்து மீட்டனர். இந்த விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்