வள்ளிமதுரை அணையில் இருந்து விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை வழங்க வேண்டும் அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு
வள்ளிமதுரை அணையில் இருந்து விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை வழங்க வேண்டும் என்று கலெக்டர் கார்த்திகா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தர்மபுரி,
பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.11.06 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் 5 தார்சாலை பணிகளை கலெக்டர் கார்த்திகா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சித்தேரி ஊராட்சி பேரேரி மலைவாழ் கிராமத்தில் கூட்டுறவு சங்கம் அமைத்து தேன் உற்பத்தி செய்யும் 25 பயனாளிகளை சந்தித்து பேசினார். சித்தேரி மலையிலுள்ள 64 குக்கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் கிராமத்திற்கு தலா 30 பேர் வீதம் ஒருங்கிணைந்து குழு அமைத்தால், தேன் உற்பத்தி செய்வதற்கான பயிற்சி மற்றும் வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
சித்தேரி ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் சமுதாயகூடம் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார். முழு கொள்ளளவை எட்டியுள்ள வள்ளிமதுரை வரட்டாறு அணையை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர் பாசன கால்வாய்களை சீரமைத்து விவசாயிகளின் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை தங்குதடையின்றி வழங்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ரூ.42.47 கோடி மதிப்பில் 18 தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், தாசில்தார்கள் பார்வதி, செல்வக்குமார், உதவி செயற்பொறியாளர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர்கள் வெங்கடேசன், சத்தியவாணி, கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம், கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.