தேனி அருகே ரூ.265 கோடியில் கால்நடை மருத்துவ கல்லூரி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்

தேனி அருகே ரூ.265 கோடி மதிப்பில் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

Update: 2020-12-10 05:53 GMT
தேனி,

தேனியில் புதிதாக அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க, கடந்த மார்ச் மாதம் 20-ந்தேதி சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. இது, தமிழகத்தின் 6-வது அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகும்.

ஏற்கனவே, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, நெல்லை, சேலம் ஆகிய 5 இடங்களில் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தேனி அருகே வீரபாண்டி பகுதியில் ரூ.265 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக 253.64 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டு விழா

முதற்கட்டமாக, தமிழக அரசு ரூ.94 கோடியே 72 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையிலும் நடக்கிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார்.

அதைத்தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடக்க விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கட்டுமான பணிகளை, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார். விழாவில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார்.

இதேபோல் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தற்காலிகமாக தேவதானப்பட்டி அருகில் உள்ள தனியார் பள்ளி கட்டிடத்தில் செயல்பட உள்ளது. இதற்காக 2020-21-ம் கல்வியாண்டிற்காக 40 மாணவ, மாணவிகள் சேர்க்கை நடக்க அரசால் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்