திண்டிவனம் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட ராகி தோசைமாவு பாக்கெட்டுகளில் வண்டு பூச்சிகள்

திண்டிவனம் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட ராகி தோசைமாவு பாக்கெட்டுகளில் வண்டு பூச்சிகள் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

Update: 2020-12-10 04:08 GMT
திண்டிவனம்,

திண்டிவனத்தில் செஞ்சி ரோட்டில் ரோசணை பகுதியில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. இங்கு நேற்று அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் உடனடி ராகி தோசை மாவு பாக்கெட்டை குடும்ப அட்டைதாரர்கள் பலர் வாங்கி சென்றனர். வீட்டுக்கு சென்று பார்த்த போது, மாவு பாக்கெட்டில் வண்டுகள் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக ரேஷன் கடையை நோக்கி விரைந்தனர். தொடர்ந்து, கடையை முற்றுகையிட்ட அவர்கள், வண்டு வைத்திருந்த உடனடி ராகி தோசை மாவு பாக்கெட்டுகளை கிழித்து கடையின் முன்பு எறிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார், அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து திண்டிவனம் சப்-கலெக்டர் அனு, வட்ட வழங்கல் அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் நேரில் சென்று விசாரித்தனர். அப்போது, அங்கிருந்த கடை ஊழியர் ராமசாமி, உடனடி ராகி மாவு பாக்கெட்டில் வண்டுகள் இருந்தது குறித்து தெரியாமல் வினியோகம் செய்து விட்டதாகவும், அதுபற்றிய விவரம் அறிந்தவுடன் உடனடியாக அந்த மாவு பாக்கெட்டுகளை வழங்குவதை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் இனி இது போன்று நடைபெறாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சப்-கலெக்டர் அனு கடை ஊழியரை எச்சரிக்கை செய்தார். அதோடு இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகள்