விவசாயிகளுக்கு ஆதரவாக மறியல்: அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது 6 பிரிவுகளில் வழக்கு

புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;

Update:2020-12-10 06:44 IST
புதுச்சேரி,

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் நேற்று முன்தினம் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. புதுவையில் நடந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனால் பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டதால் மாநிலமே ஸ்தம்பித்தது.

இதுதவிர 7 இடங்களில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். புதுவை பஸ் நிலையத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிர மணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புதுப் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் போலீசார், கும்பலாக கூடுதல் (143), அரசின் தடை உத்தரவை மீறுதல் (188), நோய் பரப்பும் நடவடிக்கையில் ஈடுபடுதல் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அனைத்து தொழிற்சங்கத்தினர்

இதேபோல் ராஜா தியேட்டர் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கங்களை சேர்ந்த 90-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்