100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகை

100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2020-12-10 00:27 GMT
ஆலங்குடி,

ஆலங்குடி அருகே கோவிலூர் ஊராட்சியில் மழைநீர் வரத்துவாரி சீரமைப்பு பணியில் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர் பவுலினா ஜோ வேண்டுகோளின்படி 2 நாட்கள் ஈடுபட்டனர். இந்த 2 நாட்களையும் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய ஊராட்சி செயலாளர் மறுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் வருகை பதிவேட்டில் பதிவு செய்ய வலியுறுத்தி கோவிலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் வரவில்லை. அவர்கள் வந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். எனவே முற்றுகையை கைவிடுங்கள் என வலியுறுத்தினர்.

பரபரப்பு

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீங்கள் சொல்வதால் முற்றுகையைக் கைவிடுகிறோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் நாளை (இன்று) சாலைமறியல் செய்வோம் என்று கூறி முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்