பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையங்களை அமைத்ததில் முறைகேடு: சட்டசபை கூட்டு குழு விசாரணை நடத்த முடிவு - முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
கர்நாடகத்தில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையங்களை நிறுவியதில் முறைகேடு நடந்துள்ளது குறித்து சட்டசபை கூட்டு குழு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில், பா.ஜனதா உறுப்பினர்கள் பசனகவுடா பட்டீல் யத்னால், அரக ஞானேந்திரா, சித்துசவதி, காங்கிரஸ் உறுப்பினர் யு.டி.காதர் ஆகியோர், “கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்து முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-
நான் சென்ற இடங்களில் எல்லாம், இந்த பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அதனால் இதுகுறித்து சட்டசபை கூட்டு குழு விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 மாதங்களில் விசாரணை அறிக்கை பெறப்படும். இதில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்களை எக்காரணம் கொண்டும் பாதுகாக்க மாட்டோம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
அதைத்தொடர்ந்து பேசிய கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ்துறை மந்திரி ஈசுவரப்பா, “கர்நாடகத்தில் 18 ஆயிரம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 16 ஆயிரத்து 29 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் 70 சதவீத மையங்கள் நல்ல முறையில் செயல்பட்டு வருகின்றன. 20 சதவீத மையங்கள் பழுதாகி இருக்கின்றன. 4 சதவீத மையங்கள் முழுமையாக தனது செயல்பாட்டை நிறுத்திவிட்டன. நான் இந்த துறையின் மந்திரியாக பதவி ஏற்ற பிறகு, முறைகேடு புகார் வந்த மையங்களின் டெண்டரை ரத்து செய்துள்ளேன்“ என்றார்.