புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: பெங்களூருவில் விதானசவுதாவை நோக்கி விவசாயிகள் பிரமாண்ட ஊர்வலம் - போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு-பரபரப்பு
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அவற்றை வாபஸ் பெறக்கோரியும் பெங்களூருவில் விவசாயிகள் விதான சவுதா நோக்கி பிரமாண்ட ஊர்வலம் நடத்தினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
பெங்களூரு,
மத்திய அரசு, புதிதாக 3 வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது.
அவற்றில் முக்கியமாக விளைபொருட்களுக்கு அரசு வழங்கும் ஆதரவு விலை குறித்த அம்சம் இடம் பெறவில்லை. இது விவசாயிகளை மிகுந்த கவலை அடைய செய்துள்ளது. இந்த சட்டங்களை வாபஸ் பெறக் கோரி டெல்லியில் பஞ்சாப், அரியானா விவசாயிகள் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதையடுத்து நேற்று முன்தினம் விவசாயிகள் நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு நடத்தினர். இதனால் பல மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக அரசு நேற்று முன்தினம் மேல்-சபையில் நில சீர்திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இதற்கு கர்நாடக விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரியும், கர்நாடக அரசின் நில சீர்திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும் விதான சவுதாவை நோக்கி ஊர்வலம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது.
பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து சுதந்திர பூங்கா வரையில் இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களின் கைகளில் தடியை வைத்திருந்தனர். ஊர்வலமாக வந்த விவசாயிகளை சுதந்திர பூங்கா அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி விவசாயிகள் விதான சவுதாவை நோக்கி ஊர்வலம் செல்ல முயற்சி செய்தனர். அப்போது போலீசார் மற்றும் விவசாயிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
அதன் பிறகு விவசாயிகள் சுதந்திர பூங்கா வளாகத்திற்கு சென்றனர். அங்கு கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. கர்நாடக அரசு நில சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது. இது விவசாயிகளுக்கு எதிரானது. மத்திய-மாநில அரசுகளின் சருமம் தடிமனதாக உள்ளது. அதனால் தான் விவசாயிகளுக்கு எதிரான போக்கை இந்த அரசுகள் வெளிப்படுத்துகின்றன. பாதை மாறி செல்லும் இந்த அரசுகளை சரியான பாதைக்கு கொண்டு வரவே நாங்கள் தடியுடன் இந்த போராட்டத்தை நடத்துகிறோம்.
கர்நாடக அரசு நில சீர்திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும். இந்த சட்டமாக அமலுக்கு வந்தால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகுவார்கள். வேளாண் சட்டங்களை எதிர்த்து ஜனதா தளம்(எஸ்) கட்சி போராட்டம் நடத்தியது. ஆனால் மாநில அரசின் நில சீர்திருத்த சட்ட மசோதாவுக்கு அக்கட்சி ஆதரவு வழங்கியுள்ளது. அக்கட்சி பா.ஜனதாவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. விவசாயிகளின் நலனில் அக்கட்சிக்கு அக்கறை இல்லை.
பா.ஜனதாவும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் எப்படி ஒன்றாக சேர்ந்தது?. ஜனதா தளம்(எஸ்) கட்சியின் நோக்கம் தான் என்ன? என்பதை அக்கட்சி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். ஒப்பந்தத்தின் பின்னணியில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது மற்றும் அதிகாரத்தை கை மாற்றுவது போன்ற விஷயங்கள் இருக்கின்றன. குமாரசாமி ரகசிய ஒப்பந்தங்களை செய்து கொள்வதில் பெரிய தலைவர். குமாரசாமிக்கு விவசாயிகள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு கோடிஹள்ளி சந்திரசேகர் கூறினார்.
விவசாயிகளின் இந்த ஊர்வலத்தால், மெஜஸ்டிக் பகுதியை சுற்றியுள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.