நங்கநல்லூரில், சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் பரபரப்பு - போக்குவரத்து துண்டிப்பு
நங்கநல்லூரில் சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு துண்டிக்கப்பட்டது.;
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த நங்கநல்லூர் பகுதியில் இருந்து ஆதம்பாக்கத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு பாதாள சாக்கடை முக்கிய குழாய் செல்கிறது. கடந்த ஒரு வாரமாக அதிக அளவில் மழைநீருடன் கழிவுநீர் செல்வதால் சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகள் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் நங்கநல்லூர் முதல் பிரதான சாலையில் இருந்து வாணுவம்பேட்டை நோக்கி செல்லக்கூடிய பாதாள சாக்கடையின் பெரிய குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் சாலையின் நடுவில் கிணறுபோல் சுமார் 10 அடி அகலத்தில் நேற்று ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் சென்னை குடிநீர் வாரிய ஆலந்தூர் பகுதி பொறியாளர் ராணி மற்றும் அதிகாரிகள் தி.மு.க. வட்ட செயலாளர் கே.ஆர். ஜெகதீஸ்வரன், பொது நல சங்கத்தினர் விரைந்து வந்து நங்கநல்லூரில் இருந்து வாணுவம்பேட்டை செல்லும் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் நங்கநல்லூரில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு கழிவுநீர் செல்ல மாற்று ஏற்பாடுகளை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.