கோட்டூர்புரத்தில் சோக சம்பவம்: மகளுடன் பேராசிரியை தற்கொலை - குழந்தையுடன் மாயமான கணவரை போலீசார் தேடுகிறார்கள்
சென்னை கோட்டூர்புரத்தில் கல்லூரி பேராசிரியை மகளுடன் தற்கொலை செய்துகொண்டார். குழந்தையுடன் மாயமான அவரது கணவரை போலீசார் தேடுகிறார்கள்.
சென்னை,
சென்னை கோட்டூர்புரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கீதாப்பதி (வயது 38). இவரது மனைவி கல்பனா (36), தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றினார். இவர்களுக்கு குணாதிஸ்ரீ (14) என்ற மகளும், 4 வயதில் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. வீடு உள்பக்கமாக பூட்டி இருந்தது. இதுபற்றி அக்கம்பக்கத்தினர் கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது கல்பனா மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். குணாதிஸ்ரீ படுக்கையறையில் இறந்து கிடந்தார். அழுகிய நிலையில் இருந்த இருவரது உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் வீட்டின் வெளி கதவில் போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘நானும், எனது குழந்தையும் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள போகிறோம். இப்படிக்கு கீதாப்பதி’ என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து ரெயில் முன்பு யாராவது தற்கொலை செய்துள்ளார்களா? என்ற விவரம் கேட்டு ரெயில்வே போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
போலீசார் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு, தற்போது 2 உயிர்கள் பறிபோய் இருக்கலாம் என்றும், கல்பனா தற்கொலை செய்வதற்கு முன்பு குணாதிஸ்ரீக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்று இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
குழந்தையுடன் மாயமான கீதாப்பதியை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் கிடைத்தால்தான் இந்த சம்பவத்தில் உண்மையான முழு விவரம் கிடைக்கவரும் என்பது குறிப்பிடத்தக்கது.