வல்லநாடு அருகே, கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை - சரியாக படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு
வல்லநாடு அருகே சரியாக படிக்காததை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கலியாவூர் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் தம்பான். இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மகன் தங்கவேல். இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.
கல்லூரி திறக்கப்பட்டதால் நெல்லை சென்று படித்து வந்தார். இந்நிலையில் தங்கவேல் தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தங்கவேலு சரியாக படிக்காததால் அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தங்கவேல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.