கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி சாவு வீட்டையும் சேதப்படுத்தியதால் பொதுமக்கள் பீதி

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் விவசாயி வீட்டையும் காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர்.

Update: 2020-12-09 16:45 GMT
கூடலூர், 

கடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஓடக்கொல்லி மாங்கஞ்சிக்குன்னு பகுதியில் காட்டு யானை ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது.

அந்த யானை பாலு என்பவரது வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. அப்போது வீட்டிற்குள் இருந்தவர்கள் பின்வாசல் வழியாக தப்பிச்சென்றனர். அந்த வீட்டிற்குள் இருந்த பொருட்களையும் காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ஓடக்கொல்லி பகுதியைச் சேர்ந்த மணி மற்றும் குட்டன் ஆகிய கூலி தொழிலாளர்கள் நேற்று பகல் 11.30 மணிக்கு நடந்து சென்றனர். அப்போது காட்டு யானை எதிரே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணி (வயது 52), குட்டன் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் மணியை காட்டு யானை தாக்கியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். இதை அறிந்த வனத்துறையினர், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது உடலை எடுக்கவிடாமல் கிராம மக்கள் வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் அங்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் கூடலூர் வனச்சரகர் ராமகிருஷ்ணன் முதுமலையில் இருந்து கும்கி யானைகளை வரவழைத்து காட்டு யானையை விரட்டி அடிப்பதாக உறுதி அளித்தார். இதை தொடர்ந்து கூடலூர் போலீசார் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்