விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு: மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-12-09 15:14 GMT
கிருஷ்ணகிரி,

வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கிருஷ்ணகிரி நகர தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தி.மு.க. செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். மாநில சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை தலைவர் மதியழகன், துணை செயலாளர் டேம் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக புறநகர் பணிமனை எதிரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஐ.என்.டி.யு.சி. மற்றும் தோழமை தொழிற்சங்கம் சார்பில், விவசாயிகளுக்கு ஆதரவாக, மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க பணிமனை செயலாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் பொன்னுசாமி வரவேற்றார்.

இதில் தர்மபுரி மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். இதில் நிர்வாகிகள் பரமசிவம், ஞானசேகரன், சத்தியநாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பொருளாளர் முனிரத்தினம் நன்றி கூறினார்.

இதேபோல கிருஷ்ணகிரி தாசில்தார் அலுவலகம் எதிரில், மாவட்ட மைய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நடராஜன் போராட்ட விளக்கவுரையாற்றினார்.

இதில் தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்க மாநில செயலாளர் மஞ்சுளா, சாலை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் தேவன், தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் கல்யாணசுந்தரம், நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில துணை தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை நான்கு ரோட்டில் உள்ள அண்ணா சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி தலைவர் ஹரிஸ்பாபு சம்பங்கி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட பொது செயலாளர் மோகன் செட்டியார், வட்டார விவசாய அணி தலைவர் சதீஷ், சுந்தரம் மற்றும் விவசாயிகள், காங்கிரஸ் கட்சியினர் கலந்துக்கொண்டு மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்