கோபித்து சென்ற மனைவி வீட்டிற்கு வராததால் 2 வயது குழந்தை விஷம் கொடுத்து கொலை; தந்தை தற்கொலை முயற்சி
கோபித்து சென்ற மனைவி வீட்டிற்கு வராத ஆத்திரத்தில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தந்தை தற்கொலைக்கு முயன்றார். இதில் பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
மதுரை,
மதுரை செல்லூர் அகிம்சாபுரம் 8-வது தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 33). இவருக்கும், திருமங்கலத்தை சேர்ந்த அபிநயா (28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு சிவநேசன்(4) என்ற மகனும், ரித்திகா(2) என்ற மகளும் உள்ளனர். போட்டோகிராபரான ஜெயச்சந்திரன் செல்லூர் மார்க்கெட் பகுதியில் ஸ்டூடியோ வைத்துள்ளார். மேலும் தொழிலை விரிவுபடுத்துவதற்காக மனைவிக்கு தெரியாமல் சுமார் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.
பணத்தை சரியாக திரும்பிச் செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்ய தொடங்கினர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மேலும் ஜெயச்சந்திரன் வேலைக்கு செல்லாமல் கிடைக்கும் பணத்தில் மது அருந்தி வந்துள்ளார். சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் அபிநயா கணவனுடன் கோபித்து கொண்டு குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு திருமங்கலத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.
இதைத் தொடர்ந்து அவரை வீட்டிற்கு வருமாறு போன் மூலம் ஜெயச்சந்திரன் பல முறை அழைத்தும் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் மன வருத்தம் அடைந்த ஜெயச்சந்திரன் செடிகளுக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை குளிர்பானத்தில் கலந்து தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டு, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் மீட்டு மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது 2 வயது பெண் குழந்தை ரித்திகா மட்டும் இறந்துவிட்டது தெரிய வந்தது. ஆபத்தான நிலையில் ஜெயச்சந்திரனுக்கும், அவரது மகனுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செல்லூர் போலீசார் குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்ததாக ஜெயச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.