நரிக்குடியில் சேறும், சகதியுமாக மாறிய பஸ் நிலையம் பயணிகள் அவதி
நரிக்குடியில் பஸ் நிலையம் சேறும், சகதியுமாக மாறி உள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காரியாபட்டி,
விருதுநகர் மாவட்டம், நரிக்குடியை சுற்றி சுமார் 50-க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராம மக்கள் பல்வேறு காரணங்களுக்காகவும், வேலைக்காகவும் நரிக்குடிக்கு தான் வந்து செல்கின்றனர். மேலும், நரிக்குடி பஸ் நிலையத்தில் இருந்து காரியாபட்டி, அருப்புக்கோட்டை, மதுரை, மானாமதுரை, பார்த்திபனூர், சிவகங்கை, வீரசோழன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக இந்த பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் நடமாட்டத்துடன் பரபரப்பாகவே காணப்படும். ஆனால் பஸ் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பஸ் நிலையத்திற்குள் சாலை வசதி இல்லாமல் வெறும் மண் சாலையாகவே உள்ளது. தற்போது பெய்து வரும் மழை காரணமாக பஸ் நிலையத்தின் உள்புறம் உள்ள சாலை சேறும், சகதியுமாக மாறி விட்டது. ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சேறும், சகதியுமாக உள்ளதால் பயணிகள் நடந்து செல்லவே முடியாத நிலை உள்ளது.
இங்கு சாலை அமைக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும், நரிக்குடி பஸ் நிலையத்தில் சிமெண்டு அல்லது தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.