விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க.-கூட்டணி கட்சியினர் மறியல் 967 பேர் கைது

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 967 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2020-12-09 04:24 GMT
கடலூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 8-ந் தேதி (அதாவது நேற்று) மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடலூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் நேற்று காலை அண்ணாபாலம் அருகில் ஒன்று திரண்டனர். பின்னர் காலை 10.30 மணி அளவில் அனைத்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இள.புகழேந்தி, அய்யப்பன், வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், நகர செயலாளர்கள் செந்தில், ராஜதுரை, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த் உள்பட 250 பேரை போலீசார் கைது செய்து, திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திட்டக்குடி, பெண்ணாடம்

திட்டக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மங்களூர் ஒன்றிய செயலாளர் சின்னதுரை, சுப்பிரமணியன், முருகையன் உள்ளிட்ட 20 பேரை திட்டக்குடி போலீசார் கைது செய்தனர். பெண்ணாடம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட தலைவர் காமராஜ் தலைமையில் அனைத்து கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வட்டார தலைவர் கந்தசாமி, ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் கடவுள் உள்ளிட்ட 27 பேரை பெண்ணாடம் போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுதொடர்பாக மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, வட்ட செயலாளர் இளங்கோவன், குமராட்சி ஒன்றிய செயலாளர் மூர்த்தி உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்ரீமுஷ்ணத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு பிரகாஷ் தலைமையில் கம்யூனிஸ்டு கட்சியினர் இணைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சசிகுமார் உள்பட 50 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

குறிஞ்சிப்பாடி, ராமநத்தம்

இதேபோல் குறிஞ்சிப்பாடி பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தண்டபாணி தலைமையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் 40 பேரையும், ராமநத்தத்தில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை செயலாளர் மாயவன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 10 பேரையும் பண்ருட்டியில் தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 170 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம்

விருத்தாசலத்தில் தி.மு.க. கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் தலைமையில் கூட்டணி கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகிகள் அரங்க பாலகிருஷ்ணன், குரு சரஸ்வதி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நகர் பெரியசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் அய்யாயிரம், மாநில துணை செயலாளர் ராஜ்குமார், ம.தி.மு.க. சவுந்தர் உள்ளிட்ட 230 பேரை போலீசார் கைது செய்து, விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதற்கிடையே தி.மு.க. கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசன் எம்.எல்.ஏ., கைதாகி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்து பேசினார்.

ரெயில் மறியல் முயற்சி

விருத்தாசலம் தி.மு.க. மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளரும், நகர துணை செயலாளருமான ராமு தலைமையில் மாவட்ட பிரதிநிதி பழனிசாமி, வடிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி முருகன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டு சென்றனர். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே இருப்புப்பாதை போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற 130 பேரை கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சிதம்பரம் மேலவீதி அண்ணா சிலை அருகே தி.மு.க. நகர செயலாளர் செந்தில்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் மூசா, நகர செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பால.அறவாழி, நிர்வாகிகள் பாவாணன், குறிஞ்சிவளவன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த்தன், கட்டாரி சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ரெயில்வே ஊழியர்கள்

விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய ரெயில் வே தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் சதன் ரெயில் வே மஸ்தூர் யூனியன் சார்பில் கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சதன் ரெயில் வே மஸ்தூர் யூனியன் கடலூர் கிளை செயலாளர் சுந்தரராஜன் தலை மை தாங்கினார். திருச்சி கூட்டுறவு நாணய சங்க இயக்குனர் தயாளன் முன்னிலை வகித்தார். கிளை உதவி செயலாளர் இருதயராஜ், விஜயபாஸ்கர், நரேந்திரன் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு, கோஷம் எழுப்பினர்.

விவசாயிகள்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சிறுபாக்கத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் இளங்கோவன், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்