விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2020-12-09 03:01 GMT
தஞ்சாவூர்,

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரியும், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சியினர் மறியல் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். விவசாய சங்கத்தினரும், தொழிற்சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வணிகர்களும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பச்சை நிற கொடி

தஞ்சை காந்திஜிசாலை, பர்மாபஜார், அண்ணாசாலை, தெற்குஅலங்கம், தென்கீழ்அலங்கம், தெற்குவீதி, கீழராஜவீதி, கீழவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி கடைகள், நகைக்கடைகள், செல்போன் கடைகள், சுவீட்ஸ் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஓரிரு டீக்கடைகள் திறந்து இருந்தன. தஞ்சை திலகர் திடல் அருகே மாலைநேர மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டில் பகல் நேரத்திலும் எல்லா கடைகளும் திறக்கப்பட்டு இருக்கும். ஆனால் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருந்தன.

தஞ்சை தொப்புள் பிள்ளையார்கோவில் தெரு, அய்யங்கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் 150 நகைக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இவைகளில் பெரும்பாலான கடைகளில் விவசாயிகளுக்கு ஆதரவாக பச்சை நிற கொடி கட்டப்பட்டு இருந்தது. அனைத்து மருந்து கடைகளும் வழக்கம்போல் திறந்து இருந்தன.

பஸ்கள் ஓடின

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, கும்பகோணம், திருவையாறு, திருவிடைமருதூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 45 ஆயிரம் கடைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

மாவட்டத்தில் பஸ்கள், கார், வேன், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. ஆனால் பஸ்களில் குறைவான அளவே பயணிகள் பயணம் செய்தனர். பஸ் நிலையங்களிலும் கூட்டம் அதிகம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தஞ்சையில் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின. ரெயில் மறியல் போராட்டத்தில் யாரும் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரெயில் நிலையத்தின் உள்ளே நடைபாதையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 6 இடங்களில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்