சுகாதார துறையின் துரித நடவடிக்கையால் கொரோனா 2-வது அலையின் தாக்கம் தமிழகத்தில் குறைவு அமைச்சர் தகவல்

சுகாதார துறையின் துரித நடவடிக்கையால் தமிழகத்தில், கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2020-12-09 02:47 GMT
மயிலாடுதுறை,

டெல்டா மாவட்டங்களில் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த கனமழையால் ஆறுகள், வாய்க்கால்களில் மழை நீர், வெள்ளமாக செல்கின்றன. குறிப்பாக மயிலாடுதுறை பகுதியில் உள்ள வடிகால் ஆறான அய்யாவையனாற்றில் மழை நீர் நிரம்பி வெள்ளமாக செல்வதால் ஆற்காடு, மொழையூர் உள்ளிட்ட பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இதனால் மயிலாடுதுறை அருகே உள்ள ராதாநல்லூர், ஆற்காடு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து குடியிருப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் மொழையூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பாதித்துள்ளன. இதனை நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டார்.

உரிய இழப்பீடு

முன்னதாக மொழையூர் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களை அமைச்சர் பார்வையிட்டபோது விவசாயிகள், இடுப்பளவு தண்ணீரில் நின்று சேதம் அடைந்த நெற்பயிரை காண்பித்தனர். பின்னர் அமைச்சரிடம், தொடர்ந்து மழை நீரில் மூழ்கி இருப்பதால் நெற்பயிர்கள் முழுவதுமாக பதர் ஆகிவிடும் என வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனை கேட்ட அமைச்சர், விவசாயிகளுக்கு ஆறுதல் கூறியதோடு, நிச்சயமாக உரிய இழப்பீட்டை விவசாயிக்கு பெற்றுத் தருவோம் என்றார். தொடர்ந்து ஆற்காடு மற்றும் ராதாநல்லூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட 250 குடும்பத்தினர் தங்கியுள்ள முகாமில் அமைச்சர் நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு உணவு வழங்கினார். தொடர்ந்து பட்டவர்த்தி பழவாறு பாலத்தினை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா 2-வது அலை

நாகை மாவட்டத்தில் 2-வது நாளாக பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறேன். மயிலாடுதுறை பகுதியில் நெற்பயிர், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. வடிகால் ஆறான அய்யாவையனாற்றின் கொள்ளளவு 400 கன அடி அளவே ஆகும். ஆனால் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. இதனால் ஆற்றுநீர் வழிந்து வீடுகளையும், நெற்பயிரையும் சூழ்ந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைத்து தேவையான அளவு உணவு வழங்கி பாதுகாத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உரிய இழப்பீட்டை நிச்சயம் பெற்றுத்தருவோம்.

உலக அளவில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் பரவிய போதும், தமிழகத்தில் மிக குறைவாகவே தொற்று பரவியது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பும், சுகாதார துறையின் துரித நடவடிக்கையே காரணம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரி லலிதா, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க மாவட்ட செயலாளர் வி.ஜி.கே.செந்தில்நாதன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கொள்ளிடம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள ஆச்சாள்புரம், அளக்குடி, புத்தூர், கொடைக்காரன் மூளை, மாதானம், உள்ளிட்ட பகுதிகளில் மழையில் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர் மற்றும் அந்த பகுதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், கொள்ளிடம் பகுதியில் மட்டும் 25 ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. மேலும் அனைத்து பகுதிகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு தங்கியுள்ளவர்களுக்கு உணவு மற்றும் குழந்தைகளுக்கு பால் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் மற்றும் வேளாண்துறை அமைச்சரிடம் தெரிவித்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அலுவலர் லலிதா, மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி, சீர்காழி எம்.எல்.ஏ. பாரதி, மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், ஒன்றிய செயலாளர் நற்குணன், மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்