‘மாவட்டத்தில் மழை - புயல் பாதிப்பு இல்லை’ கலெக்டர் விஷ்ணு தகவல்

‘நெல்லை மாவட்டத்தில் புயல் பாதிப்பு இல்லை‘ என்று கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-09 01:37 GMT
சேரன்மாதேவி,

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள வெள்ளாங்குழியில் இருந்து திசையன்விளை வரை ரூ.872.45 கோடி மதிப்பில் வெள்ளநீர் கால்வாய் திட்ட பணி நடைபெற்று வருகிறது. இந்த கால்வாய் திட்ட பணிகளை கலெக்டர் விஷ்ணு நேற்று திடீர் ஆய்வு செய்தார். வெள்ளாங்குழி, புதூர், புதுக்குடி, சேரன்மாதேவி, பத்தமடை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த கலெக்டர் விஷ்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் மழை மற்றும் புயல் காரணமாக எந்தவித பாதிப்பும் இல்லை. பாபநாசம் அணையில் 80 சதவீத தண்ணீர் இருப்பும், மணிமுத்தாறு அணையில் 60 சதவீத தண்ணீர் இருப்பும் உள்ளது.

ஆற்றில் குளிக்க தடை

தாமிரபரணி ஆற்றில் ஏற்கனவே குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய்த்துறை மற்றும் போலீசார் மூலம் தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் வெள்ளம் சம்பந்தமாக எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. வெள்ளம் வருவதற்கான அறிகுறியும் இல்லை. அணைகளிலிருந்து தற்போது தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தெற்கு பாப்பான்குளம் கிராமத்தில் எந்திர நடவு நெல் வயல்களை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் ரூ.34 ஆயிரம் மதிப்புள்ள மானிய விலை சுழல் கலப்பையை ஜமீன்சிங்கம்பட்டி விவசாயி சொரிமுத்துவுக்கு வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆய்வின் போது உதவி கலெக்டர் பிரதீக் தயாள், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், தாசில்தார் வெற்றிச்செல்வி, வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், நதிநீர் இணைப்பு திட்ட துணை கலெக்டர் ஜென் கிறிஸ்டி, தனி தாசில்தார்கள் அம்பை மோகனா, பாளையங்கோட்டை விமலாராணி, நாங்குநேரி விஜயா, தமிழரசி, ராதாபுரம் முகமது யூசுப் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை, சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்