மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் 11-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு

மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து திருச்சியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 11-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Update: 2020-12-09 00:59 GMT
திருச்சி,

அலோபதி மருத்துவர்கள் செய்துவந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம் என்று சமீபத்தில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும், நிதியோக் அமைப்பு நான்கு குழுக்களை அமைத்து மருத்துவக்கல்வி, மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி, பொதுமக்களுக்கான சுகாதார முறைகள் ஆகிய அனைத்து மருத்துவ துறைகளையும் (நவீன மருத்துவம், ஆயுஸ்) கலந்து ஒரே கலவை முறைகளை 2030-ல் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அறிவிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்தும் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு டாக்டர்கள் கைகளில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம்

இதுகுறித்து இந்திய மருத்துவ சங்க திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்வேல் குமார் நிருபர்களிடம் கூறுகையில், “மருத்துவர்களாகிய நாங்கள் 6 வருடம் படித்துவிட்டு, மேலும் 3 வருடம் மேற்படிப்பு படித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்கிறோம். இதுதவிர மேலும் அறுவை சிகிச்சைக்காக சிறப்பாக செய்வதற்காக பல்வேறு பயிற்சிகளும் எடுத்துக் கொள்கிறோம். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் படித்துவிட்டுத்தான் அறுவை சிகிச்சைகளை செய்து வருகிறோம். ஆனால், தற்போது 3 ஆண்டுகள் மட்டுமே படித்துவிட்டு ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வது என்பது அடித்தளம் இல்லாத கட்டிடத்தை மேலும், மேலும் கட்டிக் கொண்டு செல்வதற்கு ஒப்பானது.

பொதுமக்கள் நலன்கருதி தான் நாங்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறோம். அடுத்த கட்டமாக 11-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்து மருத்துவமனையையும் மூடும் போராட்டம் நடத்தப்படும். அப்போது அவசரகால அறுவை சிகிச்சைகள் மட்டும் நடைபெறும். புறநோயாளிகள் பிரிவு இயங்காது. திருச்சி மாவட்டத்தில் 130 மருத்துவமனைகளும், 1,300 புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது“ என்று கூறினார். இதேபோல, இந்திய மருத்துவ சங்க திருச்சி கிளை அலுவலகம் முன்பும், சத்திரம் பஸ் நிலையம் அருகேயும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்