மது விருந்து தகராறு காரை ஏற்றி நண்பர் கொலை - 6 பேர் கைது

மது விருந்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக காரை ஏற்றி நண்பரை கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-12-08 21:30 GMT
தானே, 

தானே மாவட்டம டோம்பிவிலி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சாசங்க் மகாஜன்(வயது38). இவர் மும்பையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று தனது 6 நண்பர்களுடன் ஓட்டல் ஒன்றில் மது விருந்தில் கலந்து கொண்டார். அப்போது இருக்கை பிரச்சினை காரணமாக நண்பர்களிடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் சாசங்க் மகாஜன் மது விருந்தில் இருந்து வெளியேறினார். பின்னர் கர்டா சர்க்கிள் வழியாக நண்பர் தினாகின் என்பவருடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பிரச்சினையில் ஈடுபட்ட நண்பர்கள் 6 பேர் சேர்ந்து காரில் பின் தொடர்ந்து சென்றனர். பின்னர் அவரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஆத்திரமடைந்த கும்பல் காரை வேகமாக செலுத்தி சாசங்க் மகாஜன், தினாகின் மீது வேகமாக மோதிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு சாஸ்திரி நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சாசங்க் மகாஜன் உயிரிழந்தது தெரியவந்தது. நண்பர் தினாகின் சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவல் அறிந்த மான்பாடா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாசங்க் மகாஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு நடத்தினர். இதில் 6 பேரின் அடையாளம் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் போலீசார் சாசங்க் மகாஜனை காரை ஏற்றி கொலை செய்த ரோகித் கவுரவ், நிகில் சாவந்த், வினய் லங்கா, நினாட் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்