திருவள்ளூர் அருகே, மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; வாலிபர் சாவு - 2 பேர் படுகாயம்
திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் மூர்த்தி (வயது 23). மூர்த்தி நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த பிள்ளைப்பாக்கத்தை சேர்ந்த தனது உறவினரான பிரேம்குமார் (22) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புல்லரம்பாக்கத்தில் இருந்து பூண்டி நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அவர்கள் புதூர் பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் நோக்கி சரத் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக, மூர்த்தியின் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூர்த்தி, பின்னால் வந்த மினி வேன் மீது விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
மேலும் விபத்தில் அவருடன் வந்த பிரேம்குமார் மற்றும் சரத் உடன் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து வந்த பிரசாந்த் என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இதைகண்ட அந்த வழியாக வந்தவர்கள் படுகாயமடைந்த மூர்த்தி, பிரேம்குமார், பிரசாந்த் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சரத் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
ஆனால் மூர்த்தி ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துபோனார். பிரேம்குமார், பிரசாத் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.