பஸ்-ஆட்டோவுக்கு நடுவில் சிக்கி போலீஸ்காரர் பலி
பஸ்-ஆட்டோவுக்கு நடுவில் சிக்கி போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
ஆவடி,
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சுதன் (வயது 41). இவர், சென்னை பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.
ஆவடி-பூந்தமல்லி சாலையில் கோவர்த்தனகிரி அருகே சென்றபோது இவருக்கு முன்பாக தனியார் கம்பெனி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. சாலையின் குறுக்கே நாய் வந்ததால் தனியார் பஸ் டிரைவர் திடீரென பஸ்சை பிரேக் பிடித்து நிறுத்தினார்.
போலீஸ்காரர் சுதன், பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளை பிரேக் போட்டு நிறுத்தினார். அப்போது அவருக்கு பின்னால் வேகமாக வந்த ஆட்டோ, சுதன் மீது வேகமாக மோதியது.
இதில் பஸ்சுக்கும், ஆட்டோவுக்கும் நடுவில் சிக்கிய போலீஸ்காரர் சுதன், அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆவடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது கனி (20) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
பலியான போலீஸ்காரர் சுதனுக்கு ஜெயந்தி (35) என்ற மனைவியும், ரேஷ்மா (13) என்ற மகளும், கவுதம் (11) என்ற மகனும் உள்ளனர்.