கொளத்தூரில் பரிதாபம்: தாறுமாறாக ஓடிய கார் மோதி கர்ப்பிணி பலி - தப்பி ஓடிய பெண்ணுக்கு வலைவீச்சு

கொளத்தூரில் சாலையில் தாறுமாறாக ஓடியகார் மோதி கர்ப்பிணி பலியானார். அந்த காரில் வருமான வரித்துறை என எழுதி இருந்ததால் காரை ஓட்டிவந்த பெண் வருமான வரித்துறையில் அதிகாரியா என போலீசார் விசாரித்து தேடி வருகின்றனர்.

Update: 2020-12-08 23:00 GMT
செங்குன்றம்,

சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் ராமதாஸ் காலனியை சேர்ந்தவர் அசாருதீன். இவர், ராஜமங்கலத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கவுசிபி(வயது 26). தற்போது இவர், 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

நேற்று மதியம் கவுசிபி, கொளத்தூர் அருகே ‘ஸ்கேன்’ பரிசோதனை செய்துவிட்டு, அதன் முடிவை தனது கணவரிடம் சொல்வதற்காக ராஜமங்கலத்தில் உள்ள துணிக்கடைக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். சிறிதுதூரம் நடந்து வந்ததால் அவருக்கு மூச்சு வாங்கியது. இதனால் ராஜமங்கலம் ராமதாஸ் காலனி பிரதான சாலை ஓரமாக அமர்ந்து இருந்தார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக சாலையில் தாறுமாறாக ஓடிவந்த கார், கர்ப்பிணி கவுசிபி மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து நடந்ததும், அந்த காரை ஓட்டிய பெண், காரை அங்கேயே நிறுத்தி விட்டு ஆட்டோவில் ஏறி தப்பிச்சென்றுவிட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான கர்ப்பிணி கவுசிபி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான காரை பறிமுதல் செய்தனர். அந்த காரில் வருமான வரித்துறை என எழுதப்பட்டு இருந்தது. எனவே அந்த காரை ஓட்டிவந்த பெண், வருமான வரித்துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறாரா? எனவும், காரை தாறுமாறாக ஓட்டி வந்ததால் காரை ஓட்டி வந்த பெண், குடித்துவிட்டு போதையில் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாலையில் தாறுமாறாக ஓடிவந்த கார் மோதி கர்ப்பிணி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்