புயல் வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் புயல் வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகளை அமைச்சா் கே.எ.செங்கோட்டையன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காஞ்சீபுரம்,
சமீபத்திய வடகிழக்கு பருவமழை மற்றும் நிவர் புயல் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் வட்டம் வடமங்கலம் ஊராட்சியில் ஏறத்தாழ 200 ஏக்கா் நெற்பயிரில் 100 ஏக்கா் பரப்பளவு சேதமடைந்துள்ளது. இதையறிந்து பள்ளிக் கல்வி, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் செங்கோட்டையன் சேதமடைந்துள்ள நெற்பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் சிவன்கூடல் மற்றும் காஞ்சீபுரம் ஒன்றியம் காரை பகுதிகளிலும் புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். நசரத்பேட்டையில் தோட்டக்கலைத் துறையின் கீழ் 3 ஏக்கா் வாழைத்தோப்பு பாதிக்கப்பட்டுள்ளதையும் அவர் பார்வையிட்டார்.
பிறகு காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, நிவர் புயலினால் ஏற்பட்ட சேத விவரம் தொடர்பான புகைப்பட கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பார்வையிட்டார்.
பள்ளிக் கல்வித் துறை சார்பாக வெள்ள நிவாரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு வீதம் 2 ஆயிரம் பைகளில் தயார் செய்து வழங்கினார். மாவட்டத்தில் நீா் சூழப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுடன், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் அமைச்சா் செங்கோட்டையன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
பிறகு அமைச்சா் கே.எ.செங்கோட்டையன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8-ந்தேதி வரை வடகிழக்கு பருவமழை 727.93 மி.மீ பதிவாகியுள்ளது. நிவா் புயலின் காரணமாக ஏற்பட்ட பெருமழையினால் மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் இருந்த சாலைகள், சிறுபாலங்கள், கட்டிடங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் மழைநீா் தேங்கி வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையால் வெள்ள நீா் வெளியேற்றப்பட்டு தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறையில் மாவட்டத்தில் 110 கிராமங்களில் 4,613 ஏக்கர் பரப்பளவு நிவா் புயலால் வேளாண் பயிர் சேதம் ஏற்பட்டு, 1,901 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகபிரியா, ஸ்ரீபெரும்புதூா் எம்.எல்.ஏ.கே.பழனி, மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) நாராயணன், மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம், அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.