தூத்துக்குடியில் விவசாயிகள்- தி.மு.க. கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டம் - 1274 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள், தி.மு.க. கூட்டணி கட்சியினர் 1274 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி,
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரியும் நாடு முழுவதும் பாரத் பந்த் என்னும் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு தமிழகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். தொடர்ந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து துண்டு பிரசுரங்களையும் வினியோகம் செய்தனர்.
நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. தூத்துக்குடியில் பெரும்பாலான கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன. பஸ், ஆட்டோ, வேன்களும் வழக்கம் போல் இயங்கின. இந்த போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் காய்கறி மார்க்கெட் அண்ணாசிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் தி.மு.க. அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர செயலாளர் ஞானசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால், ம.தி.மு.க. மீனவர் அணி மாநில செயலாளர் நக்கீரன், மகராஜன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், விவசாயபிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 87 பேரை மத்திய பாகம் போலீசார் கைது செய்தனர். இதேபோன்று முத்தையாபுரம் மெயின் பஜாரில் மறியலில் ஈடுபட்ட 47 பேரும், தூத்துக்குடி டேவிஸ்புரத்தில் மறியலில் ஈடுபட்ட 82 பேரும், புதுக்கோட்டை பஜாரில் மறியலில் ஈடுபட்ட 33 பேரும், புதியம்புத்தூர் பஸ்நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 106 பேரும், திருச்செந்தூர் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுப்டட 230 பேரும், உடன்குடி பஜாரில் மறியலில் ஈடுபட்ட 54 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் மறியலில் ஈடுட்ட 95 பேரும், செய்துங்கநல்லூர் பஜாரில் மறியலில் ஈடுபட்ட 90 பேரும், ஏரல் காந்திசிலை அருகே மறியலில் ஈடுபட்ட 75 பேரும், விளாத்திகுளம் பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 130 பேரும், சாத்தான்குளம் பழைய பஸ் நிலைம் அருகே மறியலில் ஈடுபட்ட 68 பேரும், கடம்பூர் ரெயில்நிலையம் அருகே மறியலில் ஈடுப்டட 47 பேரும், கோவில்பட்டி ரெயில் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 130 பேரும் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் நடந்த சாலை மறியலில் ஈடுபட்ட 96 பெண்கள் உள்பட 1274 பேர் கைது செய்யப்பட்டனர்.