ஆற்காடு அருகே வாகன தணிக்கையின் போது வேன் மோதி போலீஸ்காரர் பலி; இன்ஸ்பெக்டர் படுகாயம்

ஆற்காடு அருகே வாகன தணிக்கையின்போது வேன்மோதி போலீஸ்காரர் பலியானார். இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்தார்.

Update: 2020-12-08 05:31 GMT
ஐனமூர்த்தியின் இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் மலர்வளையம் வைத்த போது
வாகன தணிக்கை
பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர்-ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் அரப்பாக்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்தப்பகுதியில் நேற்று முன்தினம் பாபர் மசூதி இடிப்பு தினம் மற்றும் திருச்செந்தூரில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நடைபெறும் வேல் யாத்திரை நிறைவு விழாவிற்கு செல்பவர்களை தடுத்து நிறுத்துவதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். காட்பாடியை அடுத்த சேவூரில் உள்ள 15-வது பட்டாலியன் பிரிவில் பணிபுரிந்த வேலூர் மாவட்டம் லத்தேரியை அடுத்த ரங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் ஐனமூர்த்தி (வயது 25) என்பவரும் பாதுகாப்பு பணியில் இருந்தார்.

வேன் மோதி போலீஸ்காரர் பலி
இரவு சுமார் 11 மணியளவில் தர்மபுரியில் இருந்து பூ ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்தவேன் அரப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கைக்காக வைக்கப்பட்டிருந்த பேரிகார்டு மீது மோதி பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீஸ்காரர் ஐனமூர்த்தி ஆகியோர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவர்களை பரிசோதித்து பார்த்து போலீஸ்காரர் ஐனமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்தனுக்கு முதலுதவி சிசிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டி.ஐ.ஜி. அஞ்சலி
இதுகுறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் மோகன்ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த ஐனமூர்த்திக்கு திருமணமாகி 11 மாதங்கள் ஆகிறது. இவரது மனைவி தமிழ்ச்செல்வி 4 மாத கர்ப்பிணி என கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐனமூர்த்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அவருடைய சொந்த ஊரான ரங்கம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.செல்வகுமார், ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், தமிழ்நாடு சிறப்பு காவல்படை சூப்பிரண்டு டி.செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராணிப்பேட்டை பூரணி, காட்பாடி ரவிச்சந்திரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

வேன் மோதி இறந்த போலீஸ்காரர் ஐனமூர்த்திக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்