மருத்துவமனை வாடகை பிரச்சினையில் மோதல்: டாக்டர் உள்பட 2 பேர் கைது

கோவையில் மருத்துவமனை வாடகை பிரச்சினை தொடர்பான மோதலில் ஈடுபட்ட டாக்டர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-12-08 05:04 GMT
கோவை,

கோவை 100 அடி ரோடு -சத்தி ரோடு சந்திப்பில் எல்லன் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இது சரிவர இயங்காததால் 2017- ம் ஆண்டில் இருந்து சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் என்பவர் குத்தகைக்கு எடுத்து மருத்துவமனையை புதுப்பித்து நடத்தி வந்தார். இதைத்தொடர்ந்து அந்த மருத்துவமனையின் பெயர் சென்னை மருத்துவமனை என்று மாற்றப்பட்டது. இந்த நிலையில், டாக்டர் உமா சங்கருக்கும், மருத்துவமனை கட்டிட உரிமையாளருக்கும் இடையே வாடகை தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 20 பேர் கொண்ட ஒரு கும்பல் மருத்துவமனைக்குள் நுழைந்து சென்னை மருத்துவமனை என்ற பெயர் பலகை எடுத்து வீசினர். பின்னர் அதில் எல்லன் மருத்துவமனை என்ற பேனரை கட்டினார்கள். மேலும் அங்கிருந்த நோயாளிகளிடம் அறையை காலி செய்யுமாறு கூறி மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவம போலீசார் முன்னிலையில்இந்த சம்பவம் நடந்துள்ளது.

டாக்டர் உள்பட 2 பேர் கைது

இந்த நிலையில் எல்லன் மருத்துவமனை சேர்மன் ராமச்சந்திரன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதில், டாக்டர் உமாசங்கர் இந்த மருத்துவமனையை 10 ஆண்டுகள் வாடகை அடிப்படையில் நடத்த ஒப்பந்தம் செய்ததாகவும், ரூ.4 கோடியே 95 லட்சத்து 71 ஆயிரம் வரை வாடகை பாக்கி வைத்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும், நிலத்துடன் ரூ.100 கோடி மதிப்புள்ள இந்த மருத்துவமனையை வேறு நபருக்கு கைமாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து நான் கேட்ட போது மேலாளர் மருதவாணனுடன் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதன் பேரில் நகர குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சவுந்தர்ராஜன் மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் சென்னை மருத்துவமனை சேர்மன் டாக்டர் உமா சங்கர், மேலாளர் மருதவாணன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவினாசி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்