தகாத உறவை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: நிதி நிறுவன ஊழியரை கொலை செய்த உறவினர் கைது

கிணத்துக்கடவு அருகே தகாத உறவை தட்டிக்கேட்ட ஆத்திரத்தில் நிதி நிறுவன ஊழியரை கொலை செய்த உறவினர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-12-08 05:02 GMT
கிணத்துக்கடவு,

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மகன் நந்தகுமார் (வயது 29). தனியார் நிதி நிறுவன ஊழியர். நந்தகுமார் தினமும் வேலைக்காக எஸ்.மேட்டுப்பாளையத்தில் இருந்து கிணத்துக்கடவிற்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு திரும்பி வரும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்துவிட்டதாக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

பின்னர் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக நந்தகுமார் தந்தை கொடுத்த புகாரின் பேரில், கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.

ஆனால் அங்கு விபத்து நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

உறவினர் தாக்கினார்

பாலசுப்பிரமணியத்தின் நெருங்கிய உறவினர் கிருஷ்ணகுமார் (35). டிரைவர். இவர் கடந்த சில மாதத்திற்கு முன்பு சூலக்கல் அருகே ஒரு தென்னந்தோப்பில் கோவில்பாளையத்தை சேர்ந்த ஒரு நபருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைக்கண்ட அந்த பகுதி மக்கள் 2 பேரையும் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த நந்தகுமார், தனது உறவினரான கிருஷ்ணகுமாரை எங்களை அவமானப்படுத்தி விட்டாயே என்று கூறி எச்சரித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து 2 பேரும் சில நாட்களாக பேசாமல் இருந்து வந்தனர். இந்த சம்பவம் கிருஷ்ணகுமாரை மனதளவில் பாதித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று எஸ்.மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த நந்தகுமாருடன், கிருஷ்ணகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையில் தாக்கினார். அப்போது, அவரை தடுக்க வந்த பொதுமக்களையும், அரிவாள் காட்டி மிரட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

கொலை வழக்காக மாற்றம்

கிருஷ்ணகுமார் தனக்கு நெருங்கிய உறவினர் என்பதால் தனது மகன் நந்தகுமார் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டதாக டாக்டரிடம் பாலசுப்பிரமணியன் கூறி விட்டதாக தெரியவந்தது.

இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த நந்தகுமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து விபத்தை வழக்கை, கிணத்துக்கடவு போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமாரை தேடி வந்தனர். இதில், கிருஷ்ணகுமார் கோவை திருமலையாம்பாளையத்தில் அருகே தனது உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வாலிபர் கைது

இதனைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று கிருஷ்ணகுமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், அவர் நந்தகுமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இந்த சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்