நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை சாலைகளில் மரங்கள் விழுந்தன; வீடுகள் இடிந்தன

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்தன. இது தவிர வீடுகள் இடிந்தன.

Update: 2020-12-08 04:18 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை பெய்தது. அப்போது ஊட்டி-கூடலூர் சாலையில் உள்ள பட்பயர் பகுதியில் மரம் வேருடன் சாய்ந்தது. இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. உடனே ஊட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, மின்வாள் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். இரவு நேரம் என்பதால் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தோடு மரம் அகற்றப்பட்டது. சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு போக்குவரத்து சீரானது.

ஊட்டியில் நேற்று காலையிலும் மழை பெய்தது. சில பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியது. தொடர்ந்து கடுங்குளிர் நிலவி வருகிறது.

இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரியில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குன்னூர், எடப்பள்ளியில் அதிக மழை பதிவாகி உள்ளது. இதையடுத்து தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயகரமான இடங்களில் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர் மழையால் 2 வீடுகளின் சுற்று சுவர்கள் சேதமடைந்து உள்ளது. அங்கு வசித்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

ராட்சத மரம் விழுந்தது

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இடுகொரையில் உள்ள அருள்நகரில் சபீனா ராணி என்பவரது வீடு, ஈளாடாவில் உள்ள காந்தி நகரில் இந்திராணி என்பவரது வீடு இடிந்தது. அவர்களுக்கு, தலைமையிடத்து துணை தாசில்தார் தனலட்சுமி நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரத்து 100 வழங்கினார்.

மேலும் நேற்று காலை கோத்தகிரி-குன்னூர் சாலையில் நடுஹட்டியில் ராட்சத மரம் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே கோத்தகிரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சாலையின் குறுக்கே கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது. ஆடுபெட்டு கிராமத்தில் உள்ள கோவிலின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு வாகனம் அந்தரத்தில் தொங்கியது. அதிர்ஷ்டவசமாக அந்த வாகனத்தில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக கயிறு கட்டி சரக்கு வாகனம் மீட்கப்பட்டது.

மழை அளவு

குன்னூரில் மழை காரணமாக சித்தி விநாயகர் கோவில் தெருவில் மாணிக்கம்(வயது 45) மற்றும் அவரது மகள் வித்யா ஆகியோரது வீடுகளின் மீது அருகில் இருந்த மற்றொரு கட்டிட சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அவர்களது வீடும் சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் எம்.எல்.ஏ.சாந்திராமு மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- ஊட்டி-34, நடுவட்டம்-14, கிளன்மார்கன்-23, கல்லட்டி-21, குந்தா-33, அவலாஞ்சி-21, எமரால்டு-13, கெத்தை-28, கிண்ணக்கொரை-30, பாலகொலா-39, குன்னூர் -50.5, கேத்தி-26, உலிக்கல்-30, எடப்பள்ளி-59, கோத்தகிரி-35, கோடநாடு-36.5. இதன் சராசரி 21.21 மி.மீ. ஆகும்.

மேலும் செய்திகள்