சிவகங்கை மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
சிவகங்கை மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கணக்கெடுப்பு பணி
அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் மூலம் சிவகங்கை ஒன்றியத்தில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிவகங்கை காமராஜர் காலனியில் கணக்கெடுப்பு பணி நடந்தது.
இந்த பணியில் மேற்பார்வையாளர் (பொறுப்பு) ரூபா ராணி, வட்டாரக்கல்வி அலுவலர்கள் பால்ராஜ், லதா தேவி, பிரான்சிசுஜஸ்டின் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் காளிராசா, ஆறுமுகம், ஜெயப்பிரகாசம், செல்வராணி, சிறப்பாசிரியர் இளமாறன் ஆகியோர் வீடு வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கு எடுத்தனர்.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறியதாவது:-
10-ந்தேதி வரை...
சிவகங்கை மாவட்டத்தில் கிராமம், கிராமமாக சென்று வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணி வருகிற 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாற்றுத்திறன் குழந்தைகள் மற்றும் பள்ளிகளில் பெயர் பதிவு இல்லாத பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற மாணவர்கள் உள்ளனரா என்பது குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.
தங்கள் பகுதிகளில் இதுபோன்று பள்ளி செல்லா மற்றும் இடை நின்ற மாணவர்கள் எவரேனும் இருப்பின் 97888 58953 என்ற அலைபேசி எண்ணிற்கோ அல்லது 04575-245978 தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.