திருச்செந்தூரில் வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி: குமரியில் 64 இடங்களில் போலீசார் வாகன சோதனை

திருச்செந்தூரில் நடந்த வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற பா.ஜனதாவினரை தடுத்து நிறுத்த குமரி மாவட்டத்தில் 64 இடங்களில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து வாகன சோதனை நடத்தினர்.

Update: 2020-12-08 03:19 GMT
நாகர்கோவில்,

பா.ஜனதா சார்பில் வேல் யாத்திரைக்கு போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. எனினும் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் தடையை மீறி திருத்தணியில் கடந்த மாதம் 6-ந் தேதி வேல் யாத்திரையை தொடங்கினார். இந்த நிலையில் வேல் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி நேற்று திருச்செந்தூரில் நடந்தது. எனினும் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

ஆனாலும் குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பா.ஜனதா தொண்டர்கள் திருச்செந்தூர் செல்ல இருந்ததாக போலீசாருக்கு தகவல் வந்தது. தடையை மீறி செல்பவர்களை தடுக்க அஞ்சுகிராமம் மற்றும் ஆரல்வாய்மொழி ஆகிய சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர். போலீசார் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே தீவிர வாகன சோதனை நடத்தி வேல் யாத்திரைக்கு புறப்பட்ட பா.ஜனதா தொண்டர்களை தடுத்து நிறுத்தினர்.

64 இடங்கள்

இதைத் தொடர்ந்து நள்ளிரவில் இருந்து நேற்று காலை வரை குமரி மாவட்டத்தில் 64 இடங்களில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தீவிர சோதனை நடத்தினர். நாகர்கோவிலை பொறுத்த வரையில் சவேரியார் ஆலய சந்திப்பு, ஈத்தாமொழி ரோடு சந்திப்பு மற்றும் ஒழுகினசேரி உள்ளிட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது பா.ஜனதா கொடி வைத்து சென்ற வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தொண்டர்கள் வேல் யாத்திரைக்கு செல்வது தெரியவந்ததால் உடனடியாக அவர்களை செல்லவிடாமல் தடுத்தனர். பின்னர் மீண்டும் திருப்பி அனுப்பினர்.

அதே சமயம் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் செல்ல அனுமதிக்கப்பட்டனர். குமரி மாவட்டத்தில் 64 இடங்களில் போலீசார் வாகன சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்