கடலூரில் மத்திய குழு ஆய்வு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது சேதமடைந்த நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2020-12-08 03:11 GMT
கடலூர்,

வங்க கடலில் உருவான ‘நிவர்’ புயல் மரக்காணம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. இதனால் உயிர்ச்சேதம் மட்டுமின்றி பொருட்சேதமும் ஏற்பட்டது. இதையடுத்து நிவர் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னி கோத்ரி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தனர்.

அந்த குழுவினர் நேற்று முன்தினம் 2 குழுக்களாக பிரிந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதன்படி கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சேதவிவரங்களை கணக்கிட மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஷ் அக்னி கோத்ரி தலைமையில் மத்திய வேளாண் துறை எண்ணெய் வித்துகள் வளர்ச்சி இயக்குனர் மனோகரன், மத்திய சாலை போக்குவரத்து துறை மண்டல அலுவலர் ரணன் ஜெய்சிங், மத்திய மீன் வளமேம்பாட்டு ஆணையர் பால்பாண்டியன் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று மாலை 3.50 மணி அளவில் கடலூர் வந்தனர்.

ஆய்வு

கடலூர்- சிதம்பரம் சாலையில் உள்ள பூண்டியாங்குப்பத்தில் பரவனாறு வெள்ளத்தில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடந்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகள் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி, அழுகிய நெற்பயிர்களை மத்திய குழுவினரிடம் காண்பித்தனர். அதன்பிறகு அங்கு நல்லாத்தூர், புலவனூர், மேலகுப்பம், ராதாவிளாகம், பெய்கநத்தம், எல்லப்பன்பேட்டை, பின்னத்தூர், அகரம், ரெட்டிப்பாளையம், தம்பிப்பேட்டை ஆகிய பகுதிகளில் நெற்பயிர்கள், வாழை, மணிலா, மரவள்ளி செடிகள் சேதமடைந்ததை புகைப்பட காட்சியாக வேளாண்மை துறையினர் வைத்திருந்தனர்.

மேலும் சேதமடைந்த பயிர்களையும் காட்சிக்காக வைத்திருந்தனர். இதை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்களிடம், சேத விவரங்கள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், வேளாண்மை துறை முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங்பேடி, மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, வேளாண்மை இணை இயக்குனர் முருகன் ஆகியோர் விளக்கினர். இதை கவனமாக கேட்ட அதிகாரிகள், அதை குறிப்பெடுத்துக்கொண்டனர்.

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம்

அதையடுத்து அங்கிருந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது விவசாய சங்க நிர்வாகிகள் இளங்கீரன், வெங்கடேசன், சண்முகம், ரவீந்திரன் மற்றும் விவசாயிகள், புயல், மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறோம். கடந்த ஒரு வாரமாக வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீர் வடிந்த பிறகு பயிர் நன்றாக இருப்பது போல் தெரியும். ஆனால் நெற்பயிர் வெளியே வரும் போது, பால் கட்டாமல் பதராகி விடும். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து இருக்கிறோம். ஆகவே நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மணிலா பயிரும் முளைப்பு திறன் இல்லாமல் அழுகி விட்டது. இதற்காக ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து இருக்கிறோம். வாழை உள்ளிட்ட மற்ற பயிர்களும் பெருமளவில் சேதமடைந்து உள்ளது. ஆகவே அனைத்து பயிர்களையும் முழுமையாக கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க உரிய வேண்டும் என்றனர். மேலும் இது தொடர்பாக மத்திய குழுவினரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது.

மருத்துவ முகாம்

இதனை தொடர்ந்து பூவாணிக்குப்பம் மெயின்ரோடு அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் சேதமடைந்த சாலைகளின் புகைப்பட காட்சி வைக்கப்பட்டு இருந்தது. இதை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து அங்கு சேதமடைந்த சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று பார்வையிட்டனர்.

அதன்பிறகு அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமை பார்வையிட்டு, அங்கு செய்துள்ள சுகாதார பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மத்திய குழுவினர் எவ்வளவு பேர் மருத்துவ வசதிகள் பெற்றுள்ளனர். எந்த மாதிரி சிகிச்சை அளிக்கப்படுகிறது போன்ற விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் முதல் தளத்தில் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கீழ்பூவாணிக்குப்பம் மக்கள் தங்கி உள்ள அறைக்கு சென்று பார்வையிட்டனர்.

தண்ணீர் சூழ்ந்துள்ளது

அவர்களிடம் எத்தனை நாட்கள் இங்கு தங்கி இருக்கிறீர்கள். உங்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதா? என்று கேட்டறிந்தனர். இதற்கு அவர்கள் புயல் வந்த நாளில் இருந்து தங்கி இருப்பதாகவும், தற்போது பெய்து வரும் மழையால் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்பதாலும் முகாமிலேயே தங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதை கேட்ட மத்திய குழுவினர், உங்களின் குழந்தைகளை எங்கே? என்று கேட்டனர். அதற்கு அவர்கள் வெளியே நிற்பதாக தெரிவித்தனர். ஒரு பெண்ணிடம் உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் என்று கேட்டனர். அதற்கு அவர் 4 பேர் இருக்கிறோம். 4 பேரும் இங்கு தான் இருக்கிறோம் என்றார். தொடர்ந்து அங்குள்ள சமையல் கூடத்தையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் கால்நடை மருத்துவ முகாமையும் அவர்கள் பார்வையிட்டனர். அவர்களிடம் டாக்டர் ஒருவர், எத்தனை கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை கூறினார்.

புகைப்பட காட்சி

அப்போது அந்த முகாமில் மாடுகள் கட்டி வைக்கப்பட்டு தீவனம் வழங்கப்பட்டு வந்தது. இதையும் அவர்கள் பார்வையிட்டு விவசாயிகளின் மாடுகளுக்கு தீவனத்தை வழங்கினர். பின்னர் கடலூர் சில்வர் பீச் சாலையில் உள்ள ஓட்டலில் தோட்டக்கலை, கால்நடைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்களின் மீட்பு பணிகள், நகராட்சி பணியாளர்களின் சீரமைப்பு பணிகள், மருத்துவ முகாம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மின்சார வாரியம், போலீசாரின் மீட்பு பணிகள் குறித்த புகைப்படங்கள், சேத விவரங்கள் குறித்த புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது.

இதையும் மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இறுதியாக வரக்கால்பட்டு மெயின்ரோட்டில் சேதமடைந்த சாலைகள் குறித்து வைக்கப்பட்டிருந்த புகைப்பட காட்சியையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து மாலை 5.45 மணி அளவில் கடலூர் மாவட்ட சேத விவரங்களை பார்வையிட்டு விழுப்புரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றனர். அங்கு புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்