விருத்தாசலம் கிளை சிறையில் கைதி சாவு: வீடியோ ஆதாரங்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைப்பு

விருத்தாசலம் கிளை சிறையில் கைதி மர்மமான முறையில் இறந்தது தொடர்பான வீடியோ ஆதாரங்களை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

Update: 2020-12-08 03:02 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வமுருகன் (வயது 39). முந்திரி வியாபாரி. கடந்த அக்டோபர் மாதம் 28-ந் தேதி பெண்ணிடம் நகை பறித்த வழக்கு தொடர்பாக நெய்வேலி நகர போலீசார், செல்வமுருகனை கைது செய்து விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர். அங்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வமுருகன் திடீரென இறந்தார். ஆனால் செல்வமுருகனை போலீசார் அடித்துக் கொலை செய்து விட்டதாக அவரது மனைவி பிரேமா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

இந்த வழக்கு சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், போலீசார் தாக்கியதால் தான் செல்வமுருகன் உயிரிழந்ததாகவும், அவரது இறப்பு தொடர்பாக தன்னிடம் இருந்த வீடியோ உள்ளிட்ட ஆதாரங்களை வெளியிட்டார். இதையடுத்து வேல்முருகனை தொடர்பு கொண்ட போலீசார், கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் ஆஜராகி வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்தால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

வீடியோ ஆதாரம்

இதைத்தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மாவட்ட செயலாளர் ஆனந்த், நகர செயலாளர் கமலநாதன் மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று காலை 10.45 மணிக்கு கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் வேல்முருகன் மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் ஆஜராகி, அங்கிருந்த துணை போலீஸ் சூப்பிரண்டு குணவர்மனிடம், செல்வமுருகன் சாவு தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்தார். மேலும் வேல்முருகனிடம் போலீசார் ஒரு மணி நேரம் விசாரித்தனர்.

பின்னர் வெளியே வந்த வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காடாம்புலியூர் முந்திரி வியாபாரி செல்வமுருகன் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டு, 3 நாட்கள் சித்ரவதை செய்யப்பட்டு, அதன் பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சட்டபூர்வமாக நடவடிக்கை

கடந்த அக்டோபர் மாதம் 28 மற்றும் 29-ந் தேதி செல்வமுருகனை தனியார் விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததற்கான சி.சி.டி.வி. வீடியோவும், மேலும் 29-ந் தேதி செல்வமுருகன் போலீஸ் காவலில் இருப்பது போன்று ஆவணங்கள் தயார் செய்திருந்ததையும் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தேன்.

அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.

சாட்சிகளை கலைக்க...

மேலும் நகைக்கடை மற்றும் விடுதியில் உள்ள வீடியோ ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதை தடுக்க வேண்டும். சாத்தான்குளம் சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்ததுபோல், இந்த வழக்கிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் ஆஜராகி வீடியோ ஆதாரங்களை ஒப்படைத்துள்ளேன். இந்த விசாரணையில் திருப்தி இல்லை எனில், மீண்டும் மேல்முறையீடு செய்வேன்.

விசாரணை ஆணையம்

தமிழகத்தில் காவல்துறையினர் தொடர்ந்து தவறு செய்து வருகின்றனர். இதனால் போலீசாரிடம் விசாரணை மேற்கொள்ள, காவல் விசாரணை ஆணையம் அமைத்து, நேர்மையானவர்களை கொண்டு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நான் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக கூறுகின்றனர். ஆனால் நான் தவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகிறேனே, தவிர காவல்துறைக்கு எதிராக செயல்படவில்லை.

இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

மேலும் செய்திகள்