கோமுகி ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மாணவனின் உடலை 4-வது நாளாக தேடும் பணி

கோமுகி ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட மாணவனின் உடலை 4-வது நாளாக தேடும் பணி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு.

Update: 2020-12-08 02:33 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வசிக்கும் தேவேந்திரன் மகன் வரதராஜ் (வயது17), குமார் மகன் ராஜ்குமார்(16), ராமு மகன் அஸ்வந்த்(15). இவர்கள் 3 பேரும் நண்பர்கள். அஸ்வந்த் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 4-ந்தேதி வரதராஜ் உள்பட கள்ளக்குறிச்சி கருணாபுரம் அருகே உள்ள கோமுகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் மறு கரைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் வரத்து அதிகரித்ததால் தவறி விழுந்த அவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வரதராஜ், ராஜ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் வரதராஜ் இறந்தார். ராஜ்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத் தொடர்ந்து ஆற்றுவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் அஸ்வந்தை தீயணைப்பு வீரர்கள் தேடினார்கள். ஆனால் ஆவனை காணவில்லை? இதனால் அவன் தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என தெரிகிறது. இதையடுத்து அஸ்வந்த் உடலை விரைவாக கண்டுபிடித்து தரக்கோரி அவனது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நேற்று 4-வது நாளாக கோமுகி ஆற்றில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மற்றும் டியூப்களில் சென்று மாணவன் அஸ்வந்த் உடலை தேடினார்கள். இதை கள்ளக்குறிச்சி சப்-கலெக்டர் ஸ்ரீகாந்த் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் தீயணைப்பு வீரர்களிடம் தேடும் பணியை கேட்டறிந்த அவர், மாணவனின் உடலை விரைந்து கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், தாசில்தார் பிரபாகர், இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்