தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை: செங்கிப்பட்டி பகுதி ஏரிகள் நிரம்பின

தஞ்சை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் செங்கிப்பட்டி பகுதி ஏரிகள் நிரம்பின.

Update: 2020-12-08 01:47 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பல இடங்களில் விளைநிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. ஏரி- குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

பூதலூர் ஒன்றியத்தில் செங்கிப்பட்டி பகுதியில் புதிய கட்டளை மேட்டு கால்வாய் மற்றும் உய்யகொண்டான் நீட்டிப்பு கால்வாய் மூலம் 100-க்கும் மேற்பட்ட ஏரிகளில் தண்ணீர் நிரப்பி ஒரு போக நெல் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு உய்யக்கொண்டான் நீட்டிப்பு கால்வாய் ஆகஸ்டு மாதத்திலும் புதிய கட்டளை மேட்டு கால்வாய் செப்டம்பர் மாதத்திலும் திறக்கப்பட்டு ஏரிகளுக்கு தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தது.

ஏரிகள் நிரம்பின

இந்த கால்வாய்களில் தலைப்பு பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பியும் கடைமடை பகுதியில் உள்ள ஏரிகளில் தண்ணீர் குறைவாகவும்

இருந்தது. இந்தநிலையில் தமிழகத்தில் மையம் கொண்டிருந்த நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து பூதலூர் ஒன்றியம் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளன.

செங்கிப்பட்டி பகுதியில் பரவலாக ஒரு போக நெல் சாகுபடி நடைபெற்று முடிந்து விட்டது. கடைமடை பகுதியில் சில இடங்களில் நடவு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடவு செய்த நெல் வயல்களில் களை எடுக்கும் பணியும் மேல் உரம் இடும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. உய்யக்குண்டான் நீட்டிப்பு கால்வாயின் பெரிய ஏரியாக கருதப்படும் வெண்டயம்பட்டி பெரிய ஏரி நிரம்பி உள்ளது. இதைப்போல புதிய கட்டளை மேட்டு கால்வாய் மூலம் பாசனம் பெறும் ஏரிகளும் நிரம்பி வழிந்து கொண்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்