சர்வதேச விருதை வென்ற ஆசிரியருக்கு முதல்-மந்திரி பாராட்டு

சர்வதேச ஆசிரியர் விருதை வென்ற சோலாப்பூரை சேர்ந்த ஆசிரியரை முதல்-மந்திரி பாராட்டினார்.

Update: 2020-12-08 01:07 GMT
மும்பை, 

இங்கிலாந்து நாட்டின் லண்டனை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று ஆண்டு தோறும் கல்வி பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கவுரப்படுத்தும் வகையில் சர்வதேச ஆசிரியர் விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச ஆசிரியர் விருதுக்காக உலகம் முழுவதும் இருந்து சுமார் 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதில் மராட்டிய மாநிலம் சோலப்பூரை சேர்ந்த ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலே சர்வதேச ஆசிரியர் விருதை வென்றார்.

இதற்காக நடந்த போட்டியில் அவர் சர்வதேச விருதுடன் 10 லட்சம் டாலரை(ரூ.7.4 கோடி) பரிசாக பெற்றார். இதில் அவர் 50 சதவீதத்தை தன்னுடன் இறுதி சுற்றுவரை வந்த 10 போட்டியாளர்களுக்கு வழங்குவதாக அறிவித்து உள்ளார்.

ரஞ்சித்சிங் திசாலே சோலாப்பூர் மாவட்டம் பரிதேவாடி மாவட்ட பஞ்சாயத்து ஆரம்ப பள்ளியில் கடந்த 2009-ல் பணிக்கு சேர்ந்தார். அவர் பெண் கல்விக்காக பாடுபட்டார்.

இந்தநிலையில் சாதனையாளரான ஆசிரியர் ரஞ்சித் சிங் திசாலேயை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் துணை முதல்-மந்திரி அஜித்பவார் நேற்று நேரில் அழைத்து பாராட்டினர். ஆசிரியரின் பெற்றோரும் பாராட்டப்பட்டனர்.

இந்த விழாவில் மந்திரிகள் பாலசாகேப் தோரட், ஏக்நாத் ஷிண்டே, ஆதித்ய தாக்கரே, வர்ஷா கெய்க்வாட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்