கோவில்பட்டியில் தொடர் மழை; கண்மாய் நிரம்பி இளையரசனேந்தல் ரோட்டில் ஓடிய மழை வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு
கோவில்பட்டியில் பெய்த தொடர் மழையின் காரணமாக அத்தைகொண்டான் கண்மாய் நிரம்பி, இளையரசனேந்தல் ரோட்டில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
ரோட்டில் ஓடிய மழைவெள்ளம்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதனால், நேற்று முன்தினம் இரவு மாவட்டம் முழுவதும் மழை கொட்டியது.
இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழை காரணமாக கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. ஆனால் மறுகால் ஓடையில் அடைப்பு அதிகமாக இருந்ததால், தண்ணீர் ஓடை வழியாக மூப்பன்பட்டி கண்மாய்க்கு செல்லாமல், இளையரசனேந்தல் சாலையில் வழியாகசென்றது. சுமார் 2 அடி உயரத்துக்கு சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு, ஓடை அடைப்புகள் அகற்றும் பணியை துரிதப்படுத்தினர். ஆனாலும் காட்டாற்று வெள்ளம் போன்று தொடர்ந்து தண்ணீர் ஓடையில் பெருக்கெடுத்து வந்து கொண்டிருந்ததால் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பு
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ஏற்கனவே கடந்த மாதம் 19-ந் தேதி பெய்த மழையில் இதேபோன்று கடும் வெள்ளம் ஏற்பட்டது. தற்போது 2-வது முறையாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அத்தைகொண்டான் கண்மாய்க்கு வரும் நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதேபோல் அத்தை கொண்டான் கண்மாயில் இருந்து இளையரசனேந்தல் ரோட்டில் உள்ள ஓடை வழியாக மூப்பன்பட்டி கண்மாய்க்கு செல்லும் நீரோடையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் வெறும் முட்புதர்களை அகற்றாமல், அரசு ஆவணத்தில் உள்ள வரைப்படத்தை கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டும் தீர்வு கிடைக்கும்” என்றனர்.
மழைநீர் மூப்பன்பட்டி கண்மாயில் அதிகம் வருவதால் கண்மாய் மதகு வழியாக நீர் வெளியேறி கால்வாய்கள் மூலம் வேலாயுதபுரம் நெடுங்குளம் கண்மாய்க்கு செல்கிறது. மூப்பன்பட்டி கண்மாயில் அமலைச்செடிகள் அதிகமாக வளர்ந்து மழைநீர் செல்லும் மதகில் அடைப்பதால் கண்மாய் உடையும் ஆபத்தும் உள்ளது. கண்மாய் உடைந்தால் சங்கரலிங்கம் பகுதியிலுள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளில் மழைநீர் செல்லும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்மாயில் உள்ள அமலைச் செடிகளை உடனடியாக அகற்றி இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குளத்தின் கால்வாய் உடைப்பு
கயத்தாறு அருகே உள்ள தெற்குமயிலோடை கிராமத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பட்டவர்த்திகுளத்தின் கால்வாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறி, அப்பகுதியில் உள்ள தோட்டத்து பயிர்களை அழித்து சென்றது.
தகவல் அறிந்ததும் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீவள்ளிசெந்தில், துணைத்தலைவர் முருகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலம்மாள் மற்றும் பலர் சேர்ந்து ஜே.சி.பி. எந்திரத்தை வைத்து உடைப்பை அடைத்தனர். குளம் உடைப்பால் அங்கு வயல்வெளிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் நீரில் மூழ்கின. முருகன் என்பவருக்கு சொந்தமான 10 ஏக்கர் மக்காச்சோளம், குருவம்மாள் செல்லையா ஆகியோரின் 4 ஏக்கர் நெற்பயிர், மக்காச்சோளம், வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளன. இதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.