பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பாபர் மசூதி பிரச்சினையை முன்வைத்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கோலாரில் பரபரப்பு

கோலாரில் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பாபர் மசூதி பிரச்சினையை முன்வைத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-12-08 00:16 GMT
கோலார் தங்கவயல்,

இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாளாக டிசம்பர் 6-ந் தேதி அமைந்துவிட்டது. அதற்கு காரணம் கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி அன்றுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், கலவரங்கள் நடந்தன. பின்னர் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

தற்போது அந்த வழக்கு முடிந்துவிட்டது. அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. அத்துடன் பாபர் மசூதி இடிப்பு பிரச்சினையும் முடிவுக்கு வந்துவிட்டது என்று கருதப்பட்டது. இருப்பினும் நாட்டில் பல்வேறு இடங்களில் பாபர் மசூதி இடிப்பு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு பலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கோலார் (மாவட்டம்) டவுன் பம்பு பஜார், சயின்ஷா நகர், டவர் பகுதி மற்றும் நெடுஞ்சாலை பகுதி உள்பட பல இடங்களில் “ 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதியை மறக்க மாட்டோம். பாபர் மசூதி ஒருநாள் எழுந்து நிற்கும்” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டிகளின் கீழ் பகுதியில் ஒரு அமைப்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அந்த அமைப்பு புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படுவதாக முகவரியும் அச்சிடப்பட்டு இருக்கிறது. அதனைக்கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதுபற்றி கோலார் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றி பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் விசாரித்து வருகிறார்கள்.

பாபர் மசூதி பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டதாக மக்கள் எண்ணி வரும் நிலையில் அப்பிரச்சினையை மீண்டும் சில சமூக விரோதிகள் கையில் எடுத்துக்கொண்டு பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டிய விவகாரம் கோலாரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்