8 மாதங்களுக்கு பிறகு கலை அறிவியல், அரசு மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டது

திருச்சியில் 8 மாதங்களுக்கு பிறகு கலை அறிவியல் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி திறக்கப்பட்டது. 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் தனிமைப்படுத்தப் பட்டனர்.

Update: 2020-12-08 00:08 GMT
திருச்சி,

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகளை திறப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி, திருச்சி நகரில் நேற்று அரசு மற்றும் தனியார் கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இளநிலை இறுதியாண்டு மாணவ- மாணவிகள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் மட்டுமே வந்தனர். கல்லூரிக்கு வந்த அவர்களுக்கு வாசலில் வைத்து உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கிருமி நாசினி மூலம் கைகழுவ ஏற்பாடு செய்யப்பட்டது. உடல் வெப்பநிலை சரியாக இருந்த மாணவ- மாணவிகள் மட்டுமே கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அரசு மருத்துவக் கல்லூரி

திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர். அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள், முக கவசம் அணிந்தபடி வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். 8 மாதங்களுக்குப் பிறகு அவர்களுக்கு நேற்று வகுப்பில் பேராசிரியர்கள் நேரடியாக பாடம் எடுத்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கல்லூரி திறக்கப்பட்ட மகிழ்ச்சியில் வளாகத்திலேயே மாணவ-மாணவிகள் குழு, குழுவாக நின்று செல்பி எடுத்துக்கொண்டனர்.

3 மாணவிகளுக்கு கொரோனா

விடுதியில் தங்கியிருந்து படித்து வரும் மாணவ-மாணவிகள் நேற்று முன்தினமே கல்லூரி வளாகத்திற்கு வந்து விட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட உடல் வெப்ப பரிசோதனையில் 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அந்த 3 மாணவிகளும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மேலும் செய்திகள்