சாலையின் குறுக்கே நாய் வந்ததால் விபத்து: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து சப்-இன்ஸ்பெக்டர் பலி
சாலையின் குறுக்கே திடீரென நாய் ஓடி வந்ததால், நிலைத்தடுமாறி கீழே விழுந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தலையில் காயமடைந்து பரிதாபமாக பலியானார்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக கடந்த 2 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தவர் சந்திரசேகர் (வயது 56). நேற்று முன்தினம் பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் பாதுகாப்பு பணிக்காக இவர், திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம் கிராமத்துக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் பணி முடிந்து இரவு 11 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் போலீஸ் நிலையத்துக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கல்பாக்கம்-செங்கல்பட்டு நெடுஞ்சாலை வழியாக அவர் வந்து கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி வந்ததால் பதறிப் போன சந்திரசேகர், அதன் மீது மோதுவதை தவிர்க்க திடீர் என பிரேக் போட்டுள்ளார். இதில் நிலைத்தடுமாறிய அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி சாலையில் விழுந்தார்.
சாவு
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இது குறித்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக் சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 1.35 மணிக்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ராணிப்பேட்டையைச் சேர்ந்த இவருக்கு கலையரசி என்ற மனைவியும் என்ஜினீயரிங் பட்டதாரியான விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இந்த விபத்து குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.