8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்பு கொட்டும் மழையிலும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டன. கொட்டும் மழையிலும் இறுதியாண்டு வகுப்பு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.

Update: 2020-12-07 23:13 GMT
புதுக்கோட்டை,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்-லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு தளர்வில் கல்லூரிகளில் இறுதியாண்டு வகுப்புகள் மட்டும் நடைபெற தமிழக அரசு அனுமதி அளித்தது.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் பூட்டப்பட்ட கல்லூரிகள் 8 மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டன. கல்லூரிகளில் இளநிலை 3-ம் ஆண்டு படிக்கும் மற்றும் முதுநிலை 2-ம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் நேற்று கல்லூரிக்கு வந்தனர்.

புதுக்கோட்டையில் நேற்று காலை முதல் மழை பெய்தது. கொட்டும் மழையிலும் மாணவ-மாணவிகள் குடைகளை பிடித்தப்படி கல்லூரிக்கு வந்தனர். அரசு மகளிர் கலைக்கல்லூரியில் வாசலில் கல்லூரி பேராசிரியைகள் நின்று மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கி, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தினர். மாணவிகள் முககவசம் அணிந்தும், அடையாள அட்டையை அணிந்து வந்திருந்தனர்.

சமூக இடைவெளி

இதேபோல மன்னர் கல்லூரியில் மாணவ-மாணவிகளின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் கொண்டு சோதனை நடத்தப்பட்டு, கைகளை கழுவ கிருமி நாசினி கொடுக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து வகுப்பறையில் அமர்ந்திருந்தனர். ஒரே வகுப்பறையில் போதுமான இடம் இல்லாதநிலையில் பக்கத்து வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் அமர வைக்கப்பட்டனர். ஏற்கனவே ஆன்-லைனில் நடத்தப்பட்ட வகுப்புகளின் தொடர்ச்சியை நேற்று வகுப்பறையில் பேராசிரியர்கள் நடத்தினர்.

8 மாதங்களுக்கு பிறகு கல்லூரி வந்த நிலையில் மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து அன்பை பரிமாறிக்கொண்டனர். இதேபோல தனியார் கல்லூரிகளிலும் இறுதியாண்டு வகுப்புகளுக்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்தனர்.

பல்கலைக்கழக தேர்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு பருவத்தேர்வுகள் வருகிற 14-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதேபோல தன்னாட்சி பெற்ற கல்லூரிகளில் இந்த மாதத்தில் பருவத்தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்படுகின்றன. அரசின் நடைமுறைகளை பின்பற்றி வகுப்புகள் செயல்படும் என பேராசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் பருவத்தேர்வு ஆன்-லைன் மூலம் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறினர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியிலும் வகுப்புகள் நேற்று முதல் தொடங்கின. மாணவ-மாணவிகள் கொரோனா பரிசோதனை செய்து அதன் முடிவு நகலினை எடுத்து வந்திருந்தனர். கல்லூரியில் மாணவ-மாணவிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து டீன் பூவதி மற்றும் பேராசிரியர்கள், பேராசிரியைகள் எடுத்துரைத்தனர். கலந்தாய்வில் மருத்துவ படிப்பினை தேர்வு செய்துள்ள மாணவ-மாணவிகளுக்கு வருகிற பிப்ரவரி மாதம் முதல் வகுப்புகள் தொடங்குவதாக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்