8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறப்பு: இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டு, இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன.

Update: 2020-12-07 22:53 GMT
பெரம்பலூர்,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த 8 மாதங்களாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே மத்திய-மாநில அரசுகள் படிப்படியாக கொரோனா ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அதனை தொடர்ந்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இதற்கிடையே பல்கலைக்கழக மானியக்குழு, கல்லூரிகள் திறந்து வகுப்புகள் நடைபெறுவதற்கான கால அட்டவணையை வெளியிட்டது. தமிழகத்தில் ஏற்கனவே கடந்த 2-ந்தேதி முதுகலை அறிவியல், தொழில்நுட்பப் பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இளநிலை கலை மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல், மருத்துவ படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு நேற்று முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதேபோல் முதுகலை அறிவியல் படிப்புகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாணவ-மாணவிகள் முக கவசம் அணிந்து கல்லூரிக்கு வந்தனர். அவர்களின் உடல் வெப்ப நிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த பிறகே, அவர்கள் கல்லூரிக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மழையால் தாமதம்

மேலும் வகுப்பறையில் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவ-மாணவிகள் அமர வைக்கப்பட்டு, பேராசியர்கள் பாடங்களை கற்பித்தனர். மேலும் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வகுப்பறைகளில் வைக்கப்பட்டிருந்தது. 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரி திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் தங்களது நண்பர்களை நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை மழை பெய்ததால் மாணவ-மாணவிகள் சிலர் கல்லூரிக்கு தாமதமாக வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூரில்...

இதேபோல் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கல்லூரிக்கு ஆர்வமுடன் வந்தனர். அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை அறிவியல் பாடப்பிரிவில் 13 துறைகளில் இறுதியாண்டு பயிலும் 833 மாணவர்களும், முதுகலையில் உள்ள 9 துறைகளில் இறுதியாண்டு பயிலும் 319 மாணவர்களும் சேர்த்து மொத்தம் 1,052 பேர் கல்வி பயில்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரிக்கு வந்த பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கிருமி நாசினி வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்தபிறகு வகுப்பறைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். வகுப்பறைகளில் சமூக இடைவெளிவிட்டு மாணவர்கள் அமரவைக்கப்பட்டு, முக கவசம் அணிந்தவாறு கல்வி கற்க தொடங்கினர். அரசு வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதன் நடைமுறைகளை கண்காணித்த பிறகு முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை ஆரம்பிப்பது பற்றி விரைவில் ஆலோசனை நடத்தப்பட்டு, நடைமுறைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு

ஜெயங்கொண்டத்தில் உள்ள அன்னை தெரசா நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு கல்வி பயிலும் மாணவிகள் கல்லூரிக்கு வந்தபோது, ஆசிரியர்கள் அவர்களுக்கு ரோஜாப் பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் சந்தனம் மற்றும் இனிப்புகள் வழங்கினர். அப்போது கல்லூரிக்கு வந்த அனைத்து மாணவிகளும் முக கவசம் அணிந்து கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திக் கொண்டு பின்னர் கல்லூரிக்கு சென்றனர். கடந்த 8 மாதங்களுக்கு பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டு, கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்